சினிமா

பொன்னியின் செல்வன்’ வெப் தொடர்மூலம் MGR கனவை நனவாக்கும் பிரபல ஹீரோயின் மகன்

பொன்னியின் செல்வன்’ வெப் தொடர் மூலம் MGR கனவை நனவாக்கும் பிரபல ஹீரோயின் மகன்
ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன் அஜய் பிரதீப், இவர் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். இவரது தந்தையான கிருஷ்ணன் தமிழகத்தின் தலை சிறந்த புகைப்படக் கலைஞர்களின் ஒருவராவார். பழம்பெரும் ஒளிப்பதிவாளரான கே எஸ் பிரசாத்தின் உதவியாளராக பணிபுரிந்துள்ள அஜய் பிரதீப், எண்ணற்ற விளம்பர படங்கள் மற்றும் அரசு மற்றும் இதர ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்ரீநிதி அஜய் தயாரிக்கும் இப்படத்தை எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் வழங்குகின்றன. பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
வெப்சீரிஸ் 12 சீசன்களில் 153 எபிசோட்களைக் கொண்டிருக்கும் என்று இயக்குநர் கூறினார். அதை தவிர இரண்டு வருடங்களில் மூன்று பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ளது. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, சாபு சிரில் கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி செய்யவுள்ளார். பாகுபலி புகழ் விஸ்வநாத் சுந்தரம் மற்றும் சண்முகவேல் ஆகியோர் ஓவிய சித்திரங்களை வடிவமைக்கின்றனர். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று (ஜனவரி 17) இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் என்று அஜய் பிரதீப் கூறியுள்ளார்.

“தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற எழுத்தாளரான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் இந்த பிரம்மாண்ட படைப்பு அர்ப்பணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர் மற்றும் கலைஞரை இயக்குநர் அஜய் பிரதீப் தனது மானசீக குருவாக நினைப்பதால் இந்தப் படைப்பை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். என்று அஜய் பிரதீப் கூறியுள்ளார்