[vc_row][vc_column][vc_column_text]மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் 82 வயதுடைய இவர் நேற்று (19.10.2023) அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
மக்கள் வருகை:
தமிழ்நாட்டின் பல பக்கங்களில் இருந்தும் மக்கள் இவருக்கு அஞ்சலி செலுத்த வருகின்றனர். வடமாவட்டங்களிலிருந்தும், தென் மாவட்டங்களிலிருந்தும் மக்கள் இங்கே குவிய தொடங்கி உள்ளனர்.
சிவப்பு உடையில் பெண்கள் பலர் கும்பல் கும்பலாக இங்கே குவிந்து வருகின்றனர். அதேபோல் ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் நேற்று மாலையில் இருந்தே மக்கள் இங்கே குவிந்து வருகின்றனர். உணவு வழங்கப்படுகிறது:
இங்கே தற்போது வரக்கூடிய மக்கள் எல்லோருக்கும் நேற்று இரவு டீ கொடுக்கப்பட்டது தொடங்கி அதிகாலையில் இருந்தே உணவு வழங்கப்படுகிறது. அதிகாலை 7 மணிக்கே இட்லி, பொங்கல் உணவு வழங்கப்பட்டது. பல்வேறு அமைப்புகள் தனி தனியாக உணவு வழங்கின.
ஆங்காங்கே ஸ்டால் அமைத்து தன்னெழுச்சியாக இவர்கள் உணவு வழங்கினார்கள். பங்காரு அடிகளார் மூலம் பலன் அடைந்தவர்கள்.. அவர் சொன்ன வார்த்தைகள் மூலம் குணம் அடைந்தவர்கள்.. பல நோய்களில் இருந்து விடுபட்டவர்கள் எல்லாம் இங்கே வந்து உணவு வழங்கி வருகின்றனர்.
இவருக்கு பல கோடீஸ்வரர்கள், பணக்காரர்கள் கூட தீவிர பக்தர்களாக இருந்தனர். அவர்கள் எல்லாரும் இங்கே வந்து தற்போது பங்காரு அடிகளாரின் பக்தர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
அதிசயம்:
பங்காரு அடிகளார் இருக்கும் போது அடிக்கடி தர்மம் என்ற வார்த்தையை கூறுவார். அதில் மக்களுக்கு உணவு அளிப்பதே தர்மம். அந்த தர்மமே நம்மை காக்கும். உணவு வழங்கும் தர்மமே நம் உயிர் காக்கும் என்று கூறி வந்தார்.
அவர் இறந்த நாளில் அவரின் சொல்லை கேட்டு.. அவரின் ஏகப்பட்ட பக்தர்கள் அப்படியே மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மக்களின் இந்த செயல் மேல்மருவத்தூர் மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
பின்னணி:
மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடம் இயங்கி வருகிறது. இந்திய பீடத்தை நிறுவி குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார்.
ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்தவர் என்று அழைக்கப்பட்டவர் இவர். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர்.
பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் பலர் இவரை தீவிரமாக பின்பற்றி வந்தனர். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு.
பங்காரு அடிகளாரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.. இவருக்கு பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.. மேல்மருவத்தூரில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
பங்காரு அடிகளாரை, அம்மனின் அருள்பெற்றவராக பக்தர்கள் வணங்கி வந்தனர்.. அதனால், பக்தர்களால் “அம்மா” என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருடந்தோறும் மாலை அணிந்து விரதமிருந்து ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அஞ்சலி:
புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.. இந்த மறைவு செய்தி, அவரது பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரது உடலுக்கு தலைவர்களும், பொதுமக்களும், பக்தர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வீடு முன்பு குவிந்தபடியே உள்ளனர்..
தமிழ்நாடு மட்டும் இல்லாமல் ஆந்திரா, கர்நாடாகா, கேரளா போன்ற மாநிலங்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கென்று பக்தர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். எனவே பக்தர்கள் மேல்மருவத்தூரை நோக்கி வந்து கொண்டுமிருக்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
அடிகளாருக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, முக்கிய பிரமுகர்களும், பல்லாயிரக்கணக்கான மக்களும் கூடுவார்கள் என்பதால், மேல்மருவத்தூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோரது மேற்பார்வையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜிக்கள் பொன்னி, முத்துசாமி மற்றும் 9 மாவட்ட எஸ்பிக்கள், 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாகவும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட் டங்களை சேர்ந்த 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று விடுமுறை: இதனிடையே, பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவையொட்டி மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “இன்று வெள்ளிக்கிழமை 20.10.2023 மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்
[/vc_column_text][/vc_column][/vc_row]