தமிழை வெளியேற்றிய “திராவிட” மாடல் அரசின் கருவறைத் தீண்டாமை!
கோவை பேரூர் பட்டீசுவரர் திருக்கோயில் குடமுழுக்கில் சமற்கிருதத்திற்கு இடமளித்து – தமிழை வெளியேற்றிய
“திராவிட” மாடல் அரசின் கருவறைத் தீண்டாமை!
கோவை பேரூரில் அமைந்துள்ள அருள்மிகு பச்சைநாயகி உடனமர் பட்டிப்பெருமான் (பட்டீசுவரர்) திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் பேரரசர் கரிகாற்சோழனால் கட்டப்பட்டது. இத்திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவில், இன்று (10.02.2025) தமிழையும், தமிழர்களையும் வெளியேற்றி, முழுக்கமுழுக்க சமற்கிருதத்திலேயே வழிபாட்டை நடத்தி,- கருவறைத் தீண்டாமையைக் கடைபிடித்துள்ள “திராவிட” மாடல் அரசுக்குத் தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருள்மிகு பட்டிப்பெருமான் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்திடக் கோரி, கடந்த 01.02.2025 அன்று, தெய்வத் தமிழ் வழிபாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு தமிழர் ஆன்மிகச் செயல்பாட்டாளர்களும் பங்கேற்ற உண்ணாப் போராட்டம் நடத்தப்பட்டது. பேரூர் ஆதீனம் திரு. சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், தெய்வத் தமிழ் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் – இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார், அரசயோகி கருவூறார் தமிழின குருபீடம் நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின்போது பகல் 11 மணியளவில், கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் – பேரூர் வட்டாட்சியர் திரு. ரமேசு அவர்கள் நேரில் வந்து, 03.02.2025 அன்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி இக்கோரிக்கையை பரிசீலிப்போம் என்று அறிவித்தார்.
தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் குடமுழுக்கின்போது (05.02.2020), நானும் (தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்) மற்ற அன்பர்களும் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த ஆணையின்படி (மனு எண் W.P. (MD) No. 1644 of 2020), திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில், சமற்கிருதத்திற்கு இணையாகக் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகியவற்றில் தமிழ் மந்திரங்கள் கூறி நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு (2020) திசம்பரில், கரூர் ஆநிலையப்பர் (பசுபதீசுவரர்) திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், பதினெண் சித்தர் பீடத்தின் தலைவருமான சித்தர் மூங்கிலடியார் அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் (WP(MD)/0017750/2020), உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மந்திரங்கள் கூறி குடமுழுக்கை நடத்த வேண்டுமென ஆணையிட்டனர். அவ்வாறு நடத்த முன்வராத கோயில்களுக்கு 10 இலட்ச ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர். அதேபோல், கடந்த செப்டம்பர் (2024) மாதம், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனருமான சத்தியபாமா அம்மையார் அவர்கள், சேலம் மாவட்டம், கஞ்சமலை – அருள்மிகு சித்தேசுவரசாமி திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்திடக் கோரி தொடர்ந்த வழக்கில் (Writ Petition No: 27340 / 2024) கடந்த 12.09.2024 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி. கிருஷ்ணக்குமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழில் குடமுழுக்கு நடத்திட ஆணையிட்டது.
இத்தீர்ப்புகளின்படி, திருக்குடமுழுக்கில் விழாக்களில், வேள்விச்சாலையிலும், கலச நீராட்டலிலும், கருவறை வழிபாட்டிலும் சமற்கிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தமிழ் அர்ச்சகர்களைப் பயன்படுத்தி, தமிழ் மந்திரங்கள் ஓத வேண்டும். ஆனால், 3.2.2025 அன்று, கோவை மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றக் கலந்தாய்வுக் கூட்டத்தில், மேற்கண்ட தீர்ப்புகளையெல்லாம் சுட்டிக்காட்டி வலியுறுத்தியபோதும், திருக்கோயிலைச் சேர்ந்த, பிராமணர்கள் தமிழுக்கு சம எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்கிட மறுத்து, திருக்கோயிலின் பழக்கவழக்கத்தில் இது இல்லை என்றும் வாதிட்டவுடன், தமிழ்நாடு அரசு இத்தீர்ப்புகளையெல்லாம் தூக்கிக் கடாசியது. “ஆகமம்“ என்ற பெயரில், தமிழ் மொழியைத் தீட்டாகக் கருதுவதும், தமிழர்களைத் தீட்டாகக் கருதுவதும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனப் பல நீதிமன்றத் தீர்ப்புகளுள்ள நிலையில், பிராமணர்களின் “பழக்க வழக்கம்” என்ற பெயரில், கருவறைத் தீண்டாமையைக் கடைபிடித்து, தமிழுக்கு வேள்விச்சாலையில் சம எண்ணிக்கையில் இடம் ஒதுக்கும் கோரிக்கையை, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் நிராகரித்து ஆணை வழங்கினார்.
கருவறைக்கு வெளியிலும், வேள்விச்சாலைக்கு வெளியிலும் தனியே ஒரு இடத்தை ஒதுக்கி, தமிழ் ஓதுவார்களிடம் ஒலிப்பெருக்கியில் தமிழ்த் திருமுறைகளைப் பாடவிட்டுவிட்டு, கருவறை – வேள்விச்சாலை – கலசம் ஆகிய மூன்று இடங்களிலும் முழுக்கமுழுக்க சமற்கிருதம் ஓதி குடமுழுக்கை நடத்திடவே ஏற்பாடுகள் நடந்தன.
இதனையடுத்து, 07.02.2025 அன்று, பட்டீசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா வேள்விச்சாலைக்கு அருகில் சென்று, தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் தலைமையில், அருள்நீர் கலயம் வைத்துத் தமிழ் மந்திரங்கள் ஓதி முதல்நாள் அறப்போராட்டம் நிகழ்ந்தது. அடுத்த நாளும் (08.02.2025) இதேபோல் அறப்போராட்டம் நிகழ்ந்தது. அன்று மாலை 3 மணியளவில், பேரூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி, தமிழ் மீட்சிப் பாசறையின் சார்பில் பேரூர் பட்டீசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா தமிழில் நிகழ்த்த வேண்டும் என்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது. இதனையடுத்து மூன்றாம் நாளாக 09.02.2025 அன்று வேள்விச்சாலைக்கு அருகில் தமிழ் மந்திரங்கள் ஓதியபோது பிராமணர்கள் அங்கு வந்து, அருள் நீர் கலயத்தை இங்கே வைக்கக் கூடாது, தமிழ் மந்திரங்கள் ஓதக் கூடாது என்று வெளிப்படையாகச் சத்தியபாமா அம்மையாரை மிரட்டினர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், அருட் கலயங்களை எடுத்துச் செல்லுங்கள், இல்லையென்றால் அகற்றி விடுவோம் என்று கூறினர். “நீங்கள் அகற்றக் கூடாது, அப்படிச் செய்வது புனிதச் சடங்கை அவமதிப்பதாகும்” என்று சத்தியபாமா அம்மையார் கூறினார். பிறகு திருக்கோயிலின் செயல் அலுவலர் அவர்கள், அங்கு வந்து இங்குத் தமிழ் வழிபாடு நிகழ்த்தவும், கலயங்களை வைக்கவும் அனுமதி இல்லை என்று கூறினார். அதற்குச் சத்தியபாமா அம்மையார் அவர்கள், “இங்கே தமிழ் வழிபாடு நிகழ்த்தக் கூடாது, அருட் கலயங்களை வைக்கக் கூடாது என்ற ஆணை ஏதாவது உள்ளதா, இருந்தால் வழங்குங்கள்” என்று கூறியபிறகே காவல்துறையினரும், கோயில் அதிகாரிகளும் கலைந்து சென்றனர்.
இவ்வளவு தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, இன்று (10.02.2025) நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது, பிராமணர்களைத் தவிர வேறு யாரும் செல்லாத வகையில் வேள்விச் சாலையைச் சுற்றிலும் தடுப்புப் பலகை வைத்தது, “திராவிட” மாடல் அரசின் காவல்துறை! கோபுரக் கலயத்தில் பிராமணர்கள் சமசுகிருத மொழி ஓதி குடமுழுக்கு விழா நிறைவு செய்த பிறகுதான் தடுப்புப் பலகைகள் அகற்றப்பட்டன. பின்னர், அம்மையார் சத்தியபாமா தலைமையிலான தமிழ் வழிபாட்டாளர்கள், தமிழ் முறைப்படி பூசை செய்த அருள் நீர் கலயத்தில் உள்ள அருள்நீரை பட்டீசுவரர் திருக்கோயில் முன்புறம் உள்ள கொடி மரத்தில் அருள் நீர் தெளித்து வழிபாட்டை நிறைவு செய்தனர். வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர் செல்வராசு, தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர் திரு. இராசேசுக்குமார், மணிகண்டன், பேராசிரியர் சௌ. காமராசு, கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பட்டீசுரம் திருக்கோயிலில் மட்டுமல்ல, சென்னை வடபழனி முருகன் திருக்கோயில், பழனி முருகன் திருக்கோயில் தொடங்கி தமிழ்நாட்டின் முதன்மையான திருக்கோயில்கள் பலவற்றிலும், உயர் நீதிமன்ற ஆணை இருந்தும்கூட, அதைச் செயல்படுத்த மறுத்து, சமற்கிருத மந்திரங்களை மட்டுமே ஓதி, கருவறைத் தீண்டாமையைக் கடைபிடித்து வரும் “திராவிட” மாடல் அரசின் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு, இனியாவது தன் போக்கைத் திருத்திக் கொண்டு, கருவறை – கலசம் – வேள்விச்சாலை ஆகிய மூன்று நிலைகளிலும் உயர் நீதிமன்ற ஆணைப்படி சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மந்திரங்களைத் தமிழ் அர்ச்சகர்கள் ஓதிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கருவறைத் தீண்டாமையைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கோவை பேரூர் பட்டீசுவரர் திருக்கோயில் குடமுழுக்கில் சமற்கிருதத்திற்கு இடமளித்து – தமிழை வெளியேற்றிய “திராவிட” மாடல் அரசின் கருவறைத் தீண்டாமை! கோவை…
