you are here Home » மருத்துவம்

மருத்துவம்

SDPGA மாநில செய்தி

மருத்துவர்களின் பணி சூழல், ஊதியம், பதவி உயர்வு எல்லாம் சரியாக இருந்தால் தான் மருத்துவர்கள் சுனக்கம் இல்லாமல் சிறப்பான மருத்துவ சேவை அளித்து மக்களை நோய்களிலிருந்து காப்பாற்ற முடியும். இதைக் கருத்தில் கொண்டு தான் மக்கள் நலனும் மருத்துவர்கள் நலனும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று நமது தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தனது இறுதி மூச்சு வரை முழங்கினார். அரசு மருத்துவர்களுக்குத் தேவையான பணி இடங்கள், தகுதிக்கு ஏற்ற ஊதியம் ஆகியவற்றை கலைஞர் அவர்கள் அரசாணை 354 மூலம் அவருடைய ஆட்சிக் காலத்தில் 2009 ல் வழங்கினார். கடந்த பத்து ஆண்டுகளாக அந்த அரசாணையை மறு ஆய்வு செய்ய நமது சங்கம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து அன்றைய அரசுச் செவி சாய்க்கவில்லை.

2019 ல் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் காலவரையற்ற போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக 118 மருத்துவர்கள் பணியிட மாற்றம் பெற்றதால் மன உளைச்சல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மரு.எல்என் செய்த தியாகத்தை மாண்புமிகு மருத்துவத் துறை அமைச்சர் அவர்கள் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் நினைவு கூர்ந்தார். இன்றைய ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மருத்துவ சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி 354 அரசாணையை மறு ஆய்வு செய்யவும் 293 அரசாணை மூலம் ஊதியப்படிகள் அளித்திடவும் உறுதி அளித்திருந்தார். அவர் சொன்னப்படி 293 அரசாணை மூலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தவிர எல்லா மருத்துவர்களுக்கும் படிகளின் பலன்களை வழங்கிவிட்டார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைச் சிறப்பாகக் கொண்டாடும் இந்த அரசு உடனடியாகக் கலைஞர் அவர்களின் 354 அரசாணையை மறு ஆய்வு செய்து மருத்துவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கவும் 293 அரசாணையின் மூலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்குப் படிகளை வழங்கவும் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் அவர்களின் கனவினை மெய்ப்பிக்க மாண்புமிகு அமைச்சர் அவர்களை அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Dr. இராமலிங்கம்
மாநில செயலாளர்
SDPGA